Sunday, June 8, 2014

குருபூசை - உறவுக் குரலுக்கு உறவுக்கை

டிசம்பர் 2000 மள்ளர் மலர் இதழில் அட்டைப் படத்தில் 'குருபூசை எதன் குறியீடாகிறது' என்ற தலையங்கச் செய்திக்குப் பதிலாக செ.கதிரேசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மூ.மு.க மாத இதழான உறவுக்குரல் தமது சனவரி 2001 இதழில் கீழ்கண்ட விமர்சனத்தை வைக்கிறது.
" யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் மள்ளர் மலருக்கு பதிலடி. டிசம்பர் 2000 மாத மள்ளர் மலர் இதழின் தலையங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு தமிழக அரசு குருபூசை விழா எடுப்பது எந்த விதத்தில் நியாயம் ஆகும்? தமிழக அரசு ஆதிக்கங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் துணை போகிற அரசா?...இந்தக் குருபூசை எதைக் குறியீடாக்குகிறது? ஆதிக்கம், அராஜகம், அட்டூழியம், கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்கள், மனிதநேய விரோதச் செயல்கள் ஆகியவை ஆகும்....வ.உ.சிக்கு குருபூசை கொண்டாடினார்கள்,  இத்தனை ஆர்ப்பாட்டம் இல்லை. டாக்டர் அம்பேத்கருக்கு நடத்த புதிய தமிழகம் ஏற்பாடு செய்துள்ளது. உண்மைத் தியாகிகளின் குருபூசைகளைத் தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை ஏனோ?" என்பதைச் சுட்டிக்காட்டி, ஏழு கேள்விகளை எழுப்பி மள்ளர் மலரின் பதிலைக் கேட்டுள்ளது. சகநண்பர்களாகிய உறவுக்குரலுக்கு பதில் அளிப்பது இரு சமுதாயங்களின் உறவுக்கு வழிவகுக்கும் என மள்ளர் மலர் நம்புகிறது.

          உறவுக் குரலின் கேள்வி 1: தமிழர் என்பதில் நம்பிக்கை கொண்ட மள்ளர் மலர் டாக்டர் அம்பேத்கர் (வட நாட்டவர்) பற்றிய அரசியல் ஆதிக்கம் தமிழகத்தில் பரவுவது குறித்த கருத்தை தெரிவிக்குமா?
         
                மள்ளர் மலரின் பதில்: டாக்டர் அம்பேதகர் அவர்கள் இந்தியா முழுமைக்கான, ஏன் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ( உங்களுக்கும் சேர்த்துத்தான்). அவர் நேதாஜி, நேரு, காந்தி போல ஒரு மிகப்பெரிய தலைவர், சீர்திருத்தவாதி. அவர் எந்த நாட்டைச் சார்ந்தவராயினும் அவரது சித்தாந்தங்கள் புத்தர், ஏசு, நபிகள், கன்பூசியஸ் சித்தாந்தங்களைப் போல உலகம் முழுவதும் பரவும். நாம் தமிழர், அவர் மராட்டியர் என்பதில் முரன்பாடு இல்லை. தற்போது இந்தியர் என்பதில் ஒற்றுமை உள்ளது.

     உறவுக் குரலின் கேள்வி 2: தமிழகத்தில் அரசு காந்தி முதல் அம்பேத்கர் வரை வடநாட்டவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதிலும், மணிமண்டபம், சிலை வைப்பதிலும் உள்ள கருத்து என்ன?
  
               மள்ளர் மலரின் பதில்: காந்தி இந்திய நாட்டின் விடுதலைக்கு அஹிம்சை முறையில் போராடி வெற்றி கண்டவர். டாக்டர் அம்பேத்கர் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களும் சம உரிமை பெற்று விடுதலை பெற வேண்டும் என்று போராடி பல கோட்பாடுகளைத் தெரிந்து சொல்லி எழுச்சியூட்டியவர். அவர்களுடைய நினைவு என்றும் மக்களுக்கு எழுச்சியூட்டுபவை. டாக்டர் அம்பேத்காரும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் கூறும் சமுத்துவம் இன்றும் இந்தியாவில் வரவில்லை. சமுத்துவ நிலையை எய்த அவர்களின் நினைவை புதுப்பித்துக் கொள்வது அவசியம். மணிமண்டபங்களும், சிலைகளும் அதற்குத் துணை புரிகின்றன. தமிழ் மூவேந்தர் மரபினரான தளபதி சுந்தரலிங்கக் குடும்பனார் போக்குவரத்துக் கழகத்தையும் சிலைகளையும் நீங்கள் எதிர்த்தது உங்களது குழப்ப சிந்தனையும் ஆதிக்க எண்ணமுமே காரணம்.

     உறவுக் குரலின் கேள்வி 3: வடநாட்டவரான அம்பேத்கர் பிறந்த நாளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது சிலக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதில் எந்தப் பிற்படுத்தப்பட்ட மக்களும் தடையாக இல்லாதபோது தமிழரான பசும்பொன் தேவரின் குருபூசைக்கு மட்டும் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் விசனப்படுவது ஏன்?

            மள்ளர் மலரின் பதில்: முதலில் இந்திய அரசியல் சட்டமும், உலக மனிதநேயக் கோட்பாடுகளும் கூறுகின்ற "அனைத்து மக்களும் சமமானவர்கள்" என்பதை நீங்கள் திரும்ப திரும்ப கூறி உறுதி செய்து கொள்ள வேண்டும். தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், உயர்த்தப்பட்டவர் என்று யாரும் இல்லை. அனைவரும் சமமானவர்களே (மள்ளர் மலர் சனவரி 2001 பார்க்கவும்). அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பெண்கள், மத சிறுபான்மையினர் ஆகிய அனைவரின் விடுதலைக்காக, முன்னேற்றத்திற்காகப் போராடிய உலக அளவிலான இந்தியத் தலைவர். பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களோ, டாக்டர் அம்பேத்கர் பெரியார் காந்தி போன்றவர்கள் போராடிய சாதிய சமத்துவத்திற்கு எதிராகச் செயல்பட்டவர். கொலை, கொள்ளைகளுக்குக் காரணமானவர். நீங்கள் இப்போது "தாழ்த்தப்பட்டவர்" என்று திரும்ப திரும்ப கூறும் அளவுக்கு உங்கள் மூளையை தவறாகப் பதப்படுத்தியவர், பாடம் செய்தவர். முத்துராமலிங்கம் ஒரு சாதியத் தலைவர். ஒரு சாதிக்குள்ளே கூட ஒரு பிரிவினரின் தலைவராக அவரை மற்ற பிரிவினர் கருதுகின்றனர். அவரின் குறியீடு நீங்கள் மேலே சுட்டிக்காட்டிய குறியீடுதான். அது வளர்வது நாட்டிற்கு நல்லதல்ல. டாக்டர் அம்பேத்கரால் பலனடைந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அவரின் நற்செயல்களில் மனம் கவரப்பட்ட அனைவரும் அவரைப் போற்றுகின்றனர். இது வரவேற்கத்தக்கது.

      உறவுக் குரலின் கேள்வி 4: தந்தைப் பெரியாரை தமிழ்ப் பகைவர் என்று கூறும் மள்ளர் மலர் வடநாட்டு அம்பேத்கரை தூக்கித் துதிபாடுவது என்ன நியாயம்.

                                            பதில்: டாக்டர் அம்பேத்கர் மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளரின் தலைவர் அல்லர். ஏற்கனவே கூறியது போல் நேதாஜி, காந்தி, நேரு போல அவர் ஒரு இந்திய தேசியத் தலைவர். அவர் தமிழர் அல்லர். அவரது கொள்கைகளும், செயல்பாடுகளும் எங்களுக்குத் தீமை செய்யவில்லை. ஆனால், கன்னடியரான பெரியாரின் பொய்யான செய்திகள், நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழ் மூவேந்தர் மரபினரான மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களைத் தீண்டாமைச் சகதியில் தள்ளியது. பட்டியல் சாதிகளில் (செட்டியூல்டு சாதிகள்) தள்ளியது. நீங்கள் கூட எங்களைத் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறுமளவிற்குத் தீங்கு விளைவித்துள்ளது. மேலும் தமிழர் என்ற பெருமையை அழிக்கும்படி பெரியார் 'தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் முட்டாள்கள், தமிழர்களில் தலைவனாகும் தகுதி யாருக்கும் இல்லை' என்பன போன்ற பேச்சுக்கள் தமிழரைத் தாழ்த்தியது. பார்ப்பனரை ஒழிக்கப் புறப்பட்ட பெரியார் உங்களைப் போன்ற புதிய பிராமணர்களை உருவாக்கியுள்ளது தமிழருக்கு தீங்கு விளைவித்துள்ளது.

                              கேள்வி 5:அரசியல் ஆதிக்கச் சாதி என்னும் நிலைக்கு உயர்ந்து கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்துறை, அரசியல் இடஒதுக்கீட்டின் மூலம் முன்னேறிவிட்டோமெனும் "திமிர்த்தனம்" யாரையும் தரம் தாழ்த்தி விமர்சிக்க முடியுமெனும் நிலைக்கு மள்ளர் மலரைத் தள்ளுகிறதா?

                                     பதில்: செட்யூல்டு சாதிகளுக்கான ஒதுக்கீடு 18 சதவீதம். இதில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ள தேவேந்திரர்களுக்கு 1 அல்லது 2 சதவீதமே கிடைத்துள்ளது. மக்கள் தொகை விகிதாச்சாரப்படி உரிய பங்கு (16%) கிடைக்கவில்லை. மற்றவர்கள் சுரண்டி சாப்பிடுகின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத ஒதுக்கீடுகள் உள்ளது. அதில் நீங்கள் உங்கள் மக்கள் தொகை விகிதாசாரத்திற்கும் அதிகமாகவே பலன் பெற்று வருகிறீர்கள். இந்த ஒதுக்கீடுகளில் தேவேந்திரர்களுக்குப் பலன் இல்லை. இழிவுதான் மிச்சம். தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களை செட்யூல்டு சாதிகள் பட்டியலிருந்து நீக்கி வேறு பட்டியலில் சேர்க்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி.
மூத்த தமிழ்க்குடியும், நெல் நாகரிகத்தைத்  தோற்றுவித்தவரும், முத்தமிழை வளர்த்தவரும், தமிழ் மூவேந்தர் மரபினருமான மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளத்தை அழித்து "தாழ்த்தப்பட்டவர்" என்று கூறும் "திமிர்த்தனம்" எங்களுக்கு இல்லை. ஆதிக்கமும், அடாவடித்தனமும், அக்கிரமும் செய்யும் திமிர்த்தனம் எங்களுக்கு இல்லை. இவைகள் உங்களுக்கு இருப்பதனாலேயே இந்தக் கேள்வி வருகிறது. எல்லா மனிதர்களும் சமமானவர்களே என்ற மனிதநேயப் பண்பாடு கொண்டவர்கள் மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர்கள். தயை செய்து இந்த தவறான எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து நீக்கி விடுங்கள். அடைக்கலம் தருதல், அக்கிரமங்களையும் அடாவடித்தனத்தையும் எதிர்க்கும் பண்பு கொண்டவர் மள்ளர். இவற்றில் நீங்களும் வந்தால் உங்களுடனும் சேர்ந்து தமிழர் பண்பாடுகளைக் காக்க செயல்படவே விரும்புகிறோம்.

                               கேள்வி 6: "வன்கொடுமை ஒழிப்புச் சட்டம்" எனும் போர்வையில் கொலை, கொள்ளை, அதிகார வர்க்கத்தை மிரட்டுதல், அரசியல் கட்சிகளில் ஆதிக்கம் செலுத்துதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் மள்ளர் மலரின் உறவுகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காக இப்படியெல்லாம் எழுதும் துணிவு வந்துவிட்டதா?

                                      பதில்: மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் வன்கொடுமை ஒழிப்புச் சட்டத்தைப் பயன்படுத்தியதில்லை என்கிற செய்தியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் கூட இதுவரை தண்டிக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையிலேயே 100-க்கும் மேற்பட்ட ஊர்களில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களான "இரட்டை டம்ளர் முறை" இருப்பதாகக் கூறியுள்ளார். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியது நியாயமானதுதான். ஆதிக்க எண்ணமும், தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், உயர்த்தப்பட்டவர் என்ற மனுநீதிக் கொள்கைகளையும் கொண்டவர்கள்தான் இந்த சட்டத்தை எதிர்ப்பார்கள்.
நீங்கள் துணிவு என்று எதைக் கூறுகிறிர்கள் என்று புரியவில்லை. அநீதிகளையும், அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும், சமூகவிரோதச் செயல்களை, திருட்டு, கொலை, கொள்ளைகளையும் எதிர்க்கின்ற துணிவு தமிழ் மூவேந்தர் மரபினரும் தமிழரின் நற்பண்புகளுக்கும், பண்பாட்டுக்கும், பெருமைக்கும், சிறப்புக்கும் காரணமான 'அருந்திறல் வீரரும் பெருந்திறல் உழவரும் திண்ணியோருமான மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. தமிழகச் சிறைகளில் உள்ள கொலை, கொள்ளை, சாராயக் குற்றவாளிகளை சாதிவாரி கணக்கிட்டால் உங்கள் பொய்மையும், தேவேந்திரர்களின் நற்பண்பும் தெளிவாகத் தெரியும்.

                              கேள்வி 7: கொலைக் குற்றவாளிப் பட்டியலில் டாக்டர் கிருஸ்ணசாமி கைது செய்யத் துணிவில்லாத தமிழகக் காவல்துறையைப் பார்த்த பிறகும் தமிழக அரசு யாருக்காக தலை வணங்குகிறது என்று மள்ளர் மலருக்குத் தெரியாதா?

                                    பதில்: பொன்.பரமகுரு காவல்துறைத் தலைவராக இருந்த காலத்தில் தகுதியற்றவர்களும், சாதிவெறி பிடித்தவர்களும் நிறையவே காவல்துறையில் புகுத்தப்பட்டு விட்டனர். ஆதிக்க எண்ணமும், சாதி துவேசமும் கொண்ட அவர்களுக்கு டாக்டர் கிருஸ்ணசாமி மீது கொலைக்குற்றம் சாட்டுவது புதுமையல்ல. ஜோடனை செய்த குற்றப்பதிவு என்பதை உணர்ந்த தமிழக அரசும், உயர் காவல்துறை அதிகாரிகளும் அவரைக் கைது செய்யவில்லை. நீதிமன்றமும் அவருக்கு ஜாமீனில் வெளிவர அனுமதித்துள்ளது. தற்போதைய தமிழக அரசு தேவேந்திரரகளுக்கு எதிரானது. உங்களைப் போல, தேவேந்திரர் என்ற அடையாளத்தை அளித்து தாழ்த்தப்பட்டவர், ஆதிதிராவிடர் என்று வேறு சாதிகளுடன் சேர்த்து அழைப்பது கண்டிக்கத்தக்கது.
தேவேந்திரரைத் தாழ்தப்பட்டவர் என்று கூறுவதில் உஙகளுக்கு ஒரு தனி இனபம் கிடைக்கும் போலிருக்கிறது. ஆனால். அது உங்களைச் சமநீதி, சமூகநீதிகளுக்கு எதிரானவராகவும், சனநாயக விரோதியாகவும் காட்டுகிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.
மள்ளர் என்னும் தேவேந்திரகுல வேளாளர்களின் தமிழ் மூவேந்தர் மரபை, நெல் நாகரிக மரபை, இலக்கிய மரபை, மருதநில மரபை, பல பல்கலைக்கழக பேராசிரியர்களும், துணை வேந்தர்களும் அறிஞர்களும் ஏற்றுக் கூறியுள்ளார்கள். அவர்களைப் பற்றி 20-க்கும் மேற்பட்ட வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. நீங்கள் அவற்றை படிக்காமல் அல்லது படித்துவிட்டுத் தெரியாததுபோல் பேசுவது அழகல்ல.
இவ்வளவுக்கும் பிறகும் பழையதை மறந்து மனிதநேயத்துடன் உங்களைச் சமமானவர்களாகக் கருதி எங்கள் உறவுக் கரங்களை நீட்டுகிறோம். பற்றிக்கொள்வதும் விட்டுவிடுவதும் உங்கள் விருப்பம்.

நன்றி மள்ளர் மலர்