Sunday, March 3, 2013

பள்ளிகள் என்போர் யார்? பூர்வீகம் குறித்த சர்ச்சை

    பண்டைய தமிழ் நிகண்டுகளில் பள்ளிகள் என்ற மக்கள் பிரிவு பற்றிக் கூறப்படவில்லை. ஆனால், பள்ளி என்றால் முல்லை நிலக்குடியிருப்பு என்று கூறப்பட்டிருக்கிறது.

பாட்டும் தொகையும் என்ற நூலில்(பக்கம் 116,நியூ செஞ்சுரி வெளியீடு) பள்ளி என்பதற்கு இடம்,சாலை,இடைச்சேரி எனவும், ‘பள்ளி அயர்ந்து என்பதற்கு நித்திரை செய்தல் எனவும் ‘பள்ளி புகுந்து துயில் கொண்ட தன்மை எனவும் பொருள் தருகின்றது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி எழுந்த நெடுநல்வாடை செய்யுள்(186) 
நள்ளென் யாமத்துப் பள்ளி கொண்டான் 
என்பதில் வரும் பள்ளி என்பது துயில் அல்லது நித்திரை கொள்தல் எனப் பொருள்படுகிறது.

சரி முல்லை நிலக்குடியிருப்பு என நிகண்டுகள் கூறும்போது, அதே நிகண்டு முல்லை நில மக்களை அண்டர்,இடையர்,ஆயர்,ஆய்ச்சியர்,கோவலர்,பொதுவர்,பொதுவியர் மற்றும் குடத்தியர் என்று கூறுகிறது. இதன்மூலம், பள்ளி என்போர் முல்லை நில மக்கள் இல்லை என்பதாகிறது.

மலைபடுகடாம் செய்யுள்(451) 
மண்ணும் பெயர்தன்ன காயும் பள்ளியும் 
என்பதில் வரும் பள்ளி என்பது சாலை எனப் பொருள்படுகிறது.

எம்.சீனிவாச அய்யங்கார் கூறுவது:
"பண்டைய காலத்தில் நகரம் அல்லது ஊரின் பல்வேறு பிரிவினரும் எவ்வாறு தனித்தனியாய் வாழ்ந்து வந்தனர் என்பது பற்றி பெரும்பாணாற்றுப்படையில் சித்தரிக்கப் பட்டுள்ள காஞ்சி மாநகரத்தை உற்று நோக்குவோம். இந்நகரத்தின் உட்பகுதில் பார்ப்பனர் குடியிருப்பு இருந்தது. இவற்றை சூழ்ந்து மள்ளர் அல்லது பள்ளர் மற்றும் கள் வினைஞர் தெருக்கள் இருந்தன. இவற்றிற்கு அப்பால் வெகு தூரத்தில் ஒரு கோடியில் இடையரின் பள்ளியும் அதற்கு அப்பால் ஒதுக்குப் புறமாய் எயினர் மற்றும் அவர்களது குடியிருப்புகளும் ஆகிய (எயினர் சேரி) பறைசேரிகளும் இருந்தன. மள்ளர் தெருக்களை ஒட்டி திருவெட்கா கோயிலும், மன்னன் இளந்திரையன் அரண்மனையும் காட்சியளிக்கின்றன. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

M. Srinivasa Ayyangar Says "But by way of introduction, it is highly desirable to present before the readers a description of an ancient town or village in which the regional classifications of the tribes explained above is clearly discernible. We shall first take the city of Kanchipuram as described in the Perumpanattuppadai a Tamil work of the 3rd or 4th century A.D. In the heart of the town were the Brahmin quarters where neither the dog nor the fowl could be seen. They were flanked on the one side by the fisherman (வலைஞர்) street and on the other by those of traders (வணிகர்) and these were surrounded by the cheris of Mallar or Pallar (உழவர்) and the toddy drawers(கள்ளடு மகளிர்). Then far removed from there were situated at one extremity of the city of Pallis of Idayars and beyond them lay the isolated Paracheri of the Eyinars and their chiefs. Next to the Mallar (உழவர்) street were the temples of Tiruvekka and the palace of the king Ilandhirayan. (Page 76, Tamil Studies, M. Srinivas Ayyangar).

இதில் கூட பள்ளி என்றால் இடையர் குடியிருப்பு என்றே காட்டப்பட்டுள்ளது.பின்னர் பள்ளி என்போர் யார்? பள்ளி என்றால் பள்ளனின் மனைவி என்று பொருள் கொள்ளலாம். ஆனால், தற்கால வன்னியர் என்போர் தங்களை பள்ளி இனமாக தெரிவித்து கொள்கின்றனர். அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற ஒரு இனம் இருந்திருக்க வேண்டும்.

சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் தொண்டைமான் இளந்திரையன் மேல் பாடிய பெரும்பாணாற்றுப்படைச் செய்யுள்:

".....முல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட் டியவி  
னீளரை யிலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பை யாடா  85

தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல்
வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தக
ரீத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை  
மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிண வொழியப் போகி நோன்கா  90

ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ
லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி
நுண்பு லடக்கிய வெண்ப லெயிற்றியர்  
பார்வை யாத்த பறைதாள் விளவி  95...."

விளக்கம்:
83-88 : நீளரை யிலவத்து .............. குரம்பை

கருத்துரை : நீண்ட அடியினையுடைய இலவமரத்தின் அசைகின்ற கொம்புகள் காய்த்த பஞ்சினையுடைய அழகிய பசிய காய், முதிர்ந்து முதுகிலே விரிந்து பஞ்சு தோன்றினாற் போன்ற வரியை முதுகிலே உடைய அணிலோடே எலியும் திரியாதபடி, யாற்றின் அறலையொத்த முதுகினையும், கொழுவிய மடலினையும் உடையதும், வேல்போலும் நுனி பொருந்தியதுமாகிய ஈந்தின் இலையாலே வேயப்பட்ட நெடிய முகட்டையும், எய்ப்பன்றியின் முதுகுபோன்ற புறத்தினையும் உடைய குடிலின்கண் என்பதாம்.

எயிற்றியர் செயல்

89-97 : மான்றோல் ............... உலக்கையோச்சி

கருத்துரை : மான்றோற் படுக்கையிலே பிள்ளையோடு முடங்கிக் கிடக்கும் ஈன்ற எயிற்றியை ஒழிய ஒழிந்தோரெல்லாம் போய், பூண்கட்டிய சீரிய கோல் செருகப்பட்ட உளிபோலும் வாயையுடைய பாரைகளாலே கரிய கரம்புநிலத்தைக் குத்திக் கிளறிப் புழுதியை அளைந்து நுண்ணிய புல்லரிசியினை வாரிக்கொண்ட வெள்ளிய பல்லை யுடைய எயினர் மகளிர், பார்வைமான் கட்டிநின்ற தேய்ந்த தாளினையுடைய விளவின் நீழலையுடைய தம் முற்றத்தே தோண்டப்பட்ட நிலவுரலிலே அப் புல்லரிசியைச் சொரிந்து குறிய வயிரமேறிய உலக்கையால் குற்றி என்பதாம்.

இந்தப் பாடலிலும் பள்ளி என்றால் படுக்கை என்ற அர்த்தப்படுகிறது. வேறு எந்தப் பாடலிலும் பள்ளி என்ற இனத்தைக் குறிக்கக் கூடிய சொல் கிடையாது. அப்படியென்றால், சங்க காலத்தில் பள்ளி என்ற இனம் இருந்ததற்கான ஆதாரம் கிடையாது.

   ஆனால், இடைக்காலத்தில் கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றிய செய்திகள் உள்ளன. காஞ்சிபுரத்துக்கு அருகில் சீயமங்கலம் சிவாலயத்தில் குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு உள்ளது. அதில் உள்ள செய்தி, சம்புபுரத்தில் இருந்த பள்ளி செல்வன் என்பவன் மற்றொரு பள்ளி வேணாட்டரையன் என்பவனோடு வேட்டைக்கு போனதைக் குறிக்கிறது.

பள்ளி ஒருவனுக்கு "அரையன்" என்ற பட்டம் இருந்தது. இதை, வேணாட்டரையன் என்பதால் அறியலாம். பல கல்வெட்டுகள் இதுபோல "அரையன்" பட்டம் பெற்ற பள்ளிகளை குறிக்கின்றன. சோழ மன்னன் இரண்டாம் ராஜாதி ராஜன் காலத்தில், பள்ளி ஒருவன் தண்டல்நாயகனாக விளங்கி இருக்கிறான். அரக்கோணத்தில் அருகில் தக்கொலத்திற்கு அருகில் சிவாலயத்திற்கு அவன் தானம் அளித்திருக்கிறான் அதை கல்வெட்டு கூறுகிறது.

விருத்தாச்சலத்தில் விருத்தகிரீஸ்வரர் கோயிலுக்கு ஒரு பள்ளி, மண்டபம் கட்டி வைத்துள்ளான். அப்பகுதியில் ஒரு நாடாளும் தலைவனாக அவன் திகழ்ந்திருக்கிறான். அதை கல்வெட்டு கூறுகிறது. எறும்பூர் காணி உடைய பள்ளி ஆளப்பிறந்தான் ஆன ஏழிசை மோகன் ஆன குலோத்துங்க சோழ காடஹாதித்தன் ஒரு முது குன்றுடைய நாயனார்க்கு மகா ஸ்நானம் செய்ய என்பேரால் ஏழிசை மோகன் என்னும் திருமண்டபம் திருக்கற்றளி சார்த்தி இத்தர்மம் செய்து முடித்தேன் என்று கூறுகிறான். இது வரலாற்று சிறப்பு மிகுந்த கல்வெட்டு.

இக்கல்வெட்டு 1170 இல் சோழர் காலத்தை சேர்ந்தது. திருநாவலூரில் இருந்த பள்ளி ஒருவன், சிற்றரசனாக திகழ்ந்து இருக்கிறான். "மாகா தேவர்க்கு இந்நாட்டு ஒக்கூர் நாட்டு பள்ளி ஆடவல்ல சொக்கன் ஆனா காலிங்கராஜ பெரியரையன் வைத்த திருனொந்தா விளக்கு" என்று இக்கல்வெட்டு கூறுகிறது.

இவ்வூரில் இருந்த மற்றொரு பள்ளி, இவ்வூர் சிவன் கோயிலுக்கு ஒரு மகா தோரணம் அளித்து உள்ளான். அவனைக்குறிக்கும் போது, 'கூடலூர் பள்ளி ஆளப்பிறந்தான் மோகன் ஆன குலோத்துங்க சோழ கச்சியராயன் இட்ட மகர தோரணம்' என்று கல்வெட்டு கூறுகிறது. இதில் இருந்து சோழர் காலத்தில் சில பள்ளிகள் வியாபாரிகளாக இருந்தனர் எனத் தெரிகிறது.

நாட்டைக் காப்பதற்காக, தங்கள் உய்ரைத் தியாகம் செய்து வீரம் விளைத்த பள்ளிகளைப் பற்றி சில கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருக்கோவிலூருக்கு அருகில் வேட்டவலம் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டு, ஆதித்தன் பள்ளி மலி என்பவன் அங்கு நடந்த போரில் வீரமரணம் எய்தினான். அன்று நாடாண்ட பிருதிகங்கரையன் என்பவன் இவனுக்காக அவ்வூர் கோயிலில் ஒரு விளக்கு எரித்தான்.

இவற்றை எல்லாம் நோக்கும் போது, பிற்காலச்சோழர் ஆட்சியில் மிக உயர்ந்த நிலையில் பள்ளிகள் இருந்தனர் என்பதும், காளிங்கராயன்,கச்சியராயன், காடவராதிராயன்,பெரியரையன், ராயன் என்றெல்லாம் பட்டம் பெற்று இருந்தனர் என்பதும் தெரிகிறது. மேலும் நாடு காப்பாளராகவும், வீரர்களாகவும் இவர்கள் வாழ்ந்தனர் என்பதும், நில சுவான்தார்களாகவும் செல்வந்தர்களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் உறுதியாகிறது. கி.பி.12ஆம் நூற்றாண்டுக்கு முன்பு 'பள்ளி' என்ற மக்களைப் பற்றி எந்த குறிப்பும் தமிழ் இலக்கியத்திலோ, கல்வெட்டுகளிலோ இல்லை எனலாம். ஆனால், 12 நூற்றாண்டில் அதாவது, குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டுக்களில் பள்ளி என்ற இனம் பற்றியும், அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

எமது கேள்விகள்

* கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இல்லாதபோது, 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் பள்ளி என்று ஒரு இனம் காட்டப்படுகின்ற மர்மந்தான் என்ன?
* வன்னியர்கள் தங்களை மூவேந்தர்கள்,பல்லவர்கள் குறிப்பாக சோழரின் வாரிசு என்று உரிமை கோருகிறார்கள். அப்படி என்றால் கி.பி.12 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு சோழர்கள்,பல்லவர்கள் யாரும் இல்லையா....?